நம் பாத்திரம் மாற்றக்கூடாது, ஆனால் அணுகுமுறையை மாற்றலாம்

Our Character Shouldn't Change, But Our Attitude Can Adapt

பாத்திரம் - CHARACTER. அனுகுமுறை - ATTITUDE.


ஒருவரிடம் இருக்கும் குணங்கள் அனைத்தையும் சேர்த்த தொகுப்பு பாத்திரம் எனப்படும். CHARACTER.


குறிப்பிட்ட ஒரு நபரிடம் அல்லது குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக நாம் வைத்திருக்கும் சிறப்பு குணம் தான் அணுகுமுறை எனப்படும். ATTITUDE.


உதாரணமாக ஒரு நண்பர் என்னிடம் இன்று ஒரு நாள் உனது காரை எனக்கு இரவலாக தர முடியுமா? என் குடும்பத்தாருடன் கொஞ்சம் வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டார்.


நான் உண்மையில் அன்று வெளியில் செல்வதற்கு காரில் ஆயத்தமாக இருந்தேன். இருந்தாலும் அந்த நண்பரிடம் இன்று என் காருக்கு வேலை இல்லை, எனவே தருகிறேன், என்று பொய் சொன்னேன்.


அதாவது நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்பது எனது குணம்.


அதே சமயம் மற்றொரு நாள் வேறு ஒரு நண்பர் இதே போல் காரை இரவலாக கேட்டார். நான் அன்று ஓய்வாக இருந்தேன். என் காருக்கு வேலை இல்லை. இருந்தாலும் அந்த நண்பரிடம் மன்னித்துக் கொள்ளுங்கள், எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது, எனக்கு கார் தேவைப்படுகிறது, எனவே உங்களுக்கு கொடுக்க முடியவில்லை மன்னிக்கவும் என்று பொய் கூறினேன்.


ஏனென்றால் அந்த நண்பர் இதுவரை எந்த ஒரு விஷயத்திற்கும் எனக்கு உதவி செய்ததில்லை. சுலபமாக உதவி செய்ய முடியும் நேரத்தில் கூட எனக்கு உதவி செய்ததில்லை. எனக்கு இக்கட்டான நிலையில் கூட அவர் எனக்கு உதவி செய்ததில்லை.


எனவே எனது குணம் உதவி செய்யும் குணமாக இருந்தாலும். குறிப்பிட்டு இந்த நண்பருக்கு உதவி செய்யக்கூடாது என்று ஒரு முடிவு எடுத்து தனியாக அணுகுமுறை வைத்திருக்கிறேன். இதற்கு பெயர் தான் ஆட்டிட்யூட். ATTITUDE.


சிலர் எல்லோரிடமும் தனது உண்மையான குணத்தை காண்பிக்கிறார்கள்.

அப்படி காண்பிக்க கூடாது. அப்படி உண்மையான குணத்தோடு எல்லோரிடமும் வாழ்வதால் தான் கெட்டவர்கள் நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். நமக்கு மன உளைச்சல் வருகிறது. பலரும் நம்மை மிஸ் யூஸ் செய்கிறார்கள்.


உதாரணமாக எனது மாமா மிகவும் நல்லவர். நண்பர்கள், சொந்தக்காரர்கள் யார் சென்று கடன் கேட்டாலும் கொடுப்பார். வட்டி இல்லாமல் பணத்தை திரும்பி வாங்கிக் கொள்வார். இப்படி பல வருடம் செய்து கொண்டு இருந்தார்.


மற்றவர்களுக்கு பணம் கொடுத்து வட்டி இல்லாமல் உதவி செய்வது அவரது நல்ல குணம். CHARACTER. இதனால் இவருக்கு நல்ல பெயர் இருந்தது.


ஒரு நாள் பணம் வாங்கிச் சென்ற நபர் திரும்ப கேட்டபோது கொடுக்காமல் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டார். உடனே எனது மாமா இனிமேல் யாருக்குமே பணம் கொடுக்க கூடாது என்று தன் நல்ல குணத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார்.


இந்த இடத்தில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட நபர் செய்யும் தவறுக்காக நமது குணத்தை மாற்றக்கூடாது. நமது நல்ல குணத்தை எப்பொழுதுமே மாற்றக்கூடாது.


அந்த குறிப்பிட்ட நபரிடம் இனிமேல் அணுகுமுறை மட்டுமே மாற்ற வேண்டும்.


இதுதான் ஞானம்.


சிலர் எல்லோரிடமும் தன் நல்ல குணத்தை காண்பிக்கிறார்கள் இது தவறு.


சிலர் ஒருவர் செய்யும் தவறுக்காக தன் குணத்தை மாற்றிக் கொள்கிறார்கள் இதுவும் தவறு.


எப்பொழுதுமே நமது பாத்திரம் என்ற அந்த குணங்களை அதாவது நல்ல குணங்களை மாற்றவே கூடாது.


ஆனால் புதிது புதிதாக அணுகுமுறை என்ற ஆட்டிட்யூட் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும்.


இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு நபருக்கும் அணுகுமுறை மட்டுமே மாற்றி வைத்திருந்தால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ முடியும்.


உதாரணமாக, நெல்சன் மண்டேலா ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு கண்ணா பின்னா என்று திட்டி பதில் அளித்தார். உடனே மற்ற நிருபர்கள் "நெல்சன் மண்டேலா அவர்களே நீங்கள் அன்புடையவர் என்று எல்லோரும் கூறுகிறார்கள் ஏன் இப்படி கத்துகிறீர்கள்" என்று கேட்டிருக்கிறார்கள்.


அதற்கு மண்டேலா அவர்கள், இது என் குணம் அல்ல, இது இந்த குறிப்பிட்ட நிருபரிடம் நான் காட்டும் அணுகுமுறை என்று கூறியிருக்கிறார்.


சிலர் ஒரு ஆண் செய்யும் தவறுக்கு அனைத்து ஆண்களையும் பழிவாங்குவார்கள். அல்லது எந்த ஆணையும் நம்ப மாட்டார்கள். அல்லது தான் ஆண்களோடு பழகும் பொழுது வைத்திருக்கும் நல்ல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக்கூடாது. குறிப்பிட்ட அந்த ஆணுக்கு மட்டும் அணுகுமுறையை மாற்ற வேண்டும். மற்ற ஆண்களிடம் உங்கள் பாத்திரத்தை தான் காண்பிக்க வேண்டும்.


சிலர் ஒரு பெண் செய்யும் தவறுக்கு அனைத்து பெண்களையும் பழிவாங்குவார்கள். அல்லது எந்த பெண்களையும் நம்ப மாட்டார்கள். அல்லது தான் பெண்களோடு பழகும் அந்த நல்ல குணத்தை மாற்றி வாழ்வார்கள். அப்படி செய்யக்கூடாது. அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மட்டும் நீங்கள் அணுகுமுறையை மட்டுமே மாற்ற வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்


எனக்கு பல நல்ல குணங்கள் உள்ளது. ஆரம்பத்தில் முதலில் பழகும் பொழுது எல்லா நல்ல குணத்தையும் ஒருவருக்கு காண்பிப்பேன். அவர்கள் நடந்து கொள்ளும் முறையை பொறுத்து எனது அணுகுமுறை மாறும். எனவே உங்களிடம் நடந்து கொள்ளும் முறையை வைத்து எனது பாத்திரத்தை நீங்கள் முடிவெடுக்க முடியாது. குறை சொல்ல முடியாது.


ஒரு படத்தில் ஒரு ஹீரோ, "நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை எதிரில் உள்ளவன் தான் முடிவு செய்வான்" என்று கூறுவார். நல்ல டைலாக்.


எனவே மீண்டும் சொல்கிறேன். நமது நல்ல குணங்களை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக நமது குணத்தை மாற்றக்கூடாது. அணுகுமுறையை மட்டுமே மாற்ற வேண்டும்.


எல்லோரிடமும் நமது நல்ல குணத்தை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல குணம் இருக்கும் நபரிடம் மட்டுமே நல்ல குணத்தை காட்ட வேண்டும். கெட்ட குணம், வஞ்சக குணம் உள்ள நபர்களிடம் அணுகுமுறை தான் காட்ட வேண்டும்.


பாத்திரம் - அணுகுமுறை இரண்டுக்கும் வித்தியாசம் புரிந்து சரியாக கடைபிடித்தால், நமக்கு எதிரிகளை இருக்க மாட்டார்கள். எல்லோரிடமும் பழகலாம், ஆனால் நமக்கு மன உளைச்சல் இருக்காது. நம்மை யாரும் மிஸ் யூஸ் செய்ய முடியாது.


தயவுசெய்து இந்த வினாடி முதல் பாத்திரம்- அணுகுமுறை இரண்டுக்கும் வித்தியாசம் புரிந்து வாழுங்கள். நீங்கள் 24 மணி நேரமும் மகிழ்ச்சியாக வாழலாம்.


இப்படிக்கு.

ஹீலர் பாஸ்கர்.