வாழ்க வளமுடன் " அல்லது " வாழ்க வளத்துடன் " இதில் எது சரி?


தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள் "வாழ்க வளமுடன் " என்பது தவறான ஒரு அர்த்தம் உடையது. வளமுடன் என்று சொல்லும்பொழுது வளம் என்ற சொல்லும் முடன் என்ற சொல்லும் வருகிறது. எனவே இது நெகட்டிவான ஒரு வார்த்தை மேலும் இது தமிழில் இப்படி உச்சரிக்கக் கூடாது இது இலக்கணப் பிழை என்று கூறுகிறார்கள்.


எனவே வாழ்க வளத்துடன் என்பதுதான் இலக்கணத்தில் சரியானது என்று கூறுகிறார்கள்.


எனவே சமீபமாக வேதாத்திரி மகரிஷி அய்யாவை பின்பற்றும் நல்லுள்ளங்கள் வாழ்க வளமுடன் என்பதை சொல்வதை நிறுத்திவிட்டு வாழ்க வளத்துடன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


இது சம்பந்தமாக எனது கருத்தை இங்கு உங்களுக்கு பரிமாறுகிறேன்.


அந்த தமிழ் இலக்கண அறிஞர்கள் கூறுவது உண்மைதான். இலக்கணப்படி அது தவறாக இருக்கலாம். ஆனால் அதற்காக அந்த வார்த்தையை மாற்ற வேண்டிய அவசியமில்லை.


ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப கூறும் பொழுது அது பிரபஞ்சத்தில் பதிவாகிறது. இதற்கு மந்திர வார்த்தை என்று பெயர். ஆங்கிலத்தில் " MAGICAL WORD " OR " KEY WORD " என்று சொல்வார்கள்.


மகரிஷி அவர்கள் பல வருடங்களாக பல மனிதர்கள் வாயிலாக எண்ணங்கள் வாயிலாக வாழ்க வளமுடன் என்ற வார்த்தையை இலக்கணத்தை மீறி மந்திரவாதியாக மாற்றிவிட்டார்.


இதுபோல மந்திர வார்த்தைகளுக்கு இலக்கணம் செல்லாது.


மகரிஷி ஐயா கூறினார் என்று அவர் மீது உள்ள அன்பின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மனதார பீலிங் லெவலில் உணர்ந்து வாழ்க வளமுடன் என்று கூறும்பொழுது நல்ல அதிர்வுகள் மட்டுமே இத்தனை வருடமாக வந்துகொண்டிருந்தது.


ஏனென்றால் அது இலக்கணப் பிழை இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.


இப்படி திடீரென தமிழ் இலக்கண அறிஞர்கள் இதுபோல கூறி மந்திர வார்த்தையை உடைத்து அதை பயன்படுத்தும் அனைவர் மனதிலும் புத்தியிலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.


இதுபோன்ற தமிழ் இலக்கண அறிஞர்கள் கூறும் எதை எப்பொழுது ஒரு நபர் கேட்கிறாரோ அந்த விநாடி முதல் வாழ்க வளமுடன் என்று கூறும் பொழுது அவர்களுக்கு ஒரு குழப்பம் ஏற்படுகிறது. இது நல்ல வார்த்தையா? கெட்ட வார்த்தையா?, இது பாசிட்டிவா? நெகட்டிவா? என்று நினைக்கும்பொழுது இத்தனை வருடமாக அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த அந்த பலன் நின்று விடுகிறது.


எனவே தயவுசெய்து தமிழ் இலக்கண அறிஞர்கள் இதுபோன்ற மந்திர வார்த்தைகள் சம்பந்தமாக உங்களது இலக்கண பிழைகளை பற்றி பேசி மக்களை குழப்பாதீர்கள் என்று உங்களை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன்


மீண்டும் சொல்கிறேன் ஒரு வார்த்தைக்கு நல்லது என்று பலரும் நம்பி விட்டால் அந்த வார்த்தை மந்திர வார்த்தையாக மாறுகிறது.


உதாரணமாக சென்னையில் கெட்ட வார்த்தை என்ற பெயரில் " அம்மா '" என்ற உன்னதமான வார்த்தை மற்றும் " ஆத்தா " என்ற உன்னதமான வார்த்தையை கெட்ட வார்த்தையாக மாற்றி பயன்படுத்துகிறார்கள்.


இந்த தமிழ் இலக்கண அறிஞர்களை இதுபோல உன்னதமான வார்த்தைகளால் திட்டினால், உடனே அவர்கள் தமிழ் இலக்கணப்படி இது கெட்ட வார்த்தை இல்லை என்று மகிழ்ச்சியாகமகிழ்ச்சியாக செல்வார்களா? அல்லது கோபப்பட்டு சண்டை போடுவார்களா?


தமிழ் மொழியில் ஒரு புனிதமான வார்த்தை மற்றொரு மொழியில் கெட்ட வார்த்தையாக இருக்க வாய்ப்பு உள்ளது.


தமிழ் மொழியில் இருக்கும் ஒரு கெட்ட வார்த்தை ஏதாவது ஒரு மொழியில் புனிதமான வார்த்தையாக இருக்க வாய்ப்பு உள்ளது.


" வாழ்க வையகம் " " வாழ்க வளமுடன் '' என்பது வேதாத்திரி மகரிஷி அய்யாவின் மந்திர வார்த்தைகள்.


இதைப் பற்றி குறை சொல்வதற்கும் மாற்றுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது.


தயவு செய்து இதை மாற்ற வேண்டாம். ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் இந்த வார்த்தையை உபயோகித்து வருகிறார்கள். பலன் பெற்று வருகிறார்கள்.


அதேபோல் செழிக்கட்டும் விவசாயம், சீர் படட்டும் நிர்வாகம், உலக மக்கள் முகங்களில் நிலவட்டும் புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வாழ்க வாழ்வாங்கு. என்பது பரஞ்சோதி மகானின் மந்திர வார்த்தைகள்.


இதைப்பற்றியும் சிலர் இது வருங்காலத்தில் வருவதுபோல் இருக்கிறது எனவே வேலை செய்யாது. நிகழ்காலத்தில் மாற்றவேண்டும் என்ற கூறி...


செழிக்கின்றது விவசாயம், சீர் பட்டுவிட்டது நிர்வாகம், உலக மக்கள் முகங்களில் புன்சிரிப்பு நிலவுகிறது, ஆன்மீகம் வளருகிறது என்று மாற்றி உச்சரிக்க சொல்லி அனைவரையும் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.


மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மந்திர வார்த்தைகளுக்கு எந்த ஒரு இலக்கணமும் செல்லுபடியாகாது.


மகான்களின் மந்திர வார்த்தைகளை குழப்புவதற்கு என்றே இவர்கள் பேசுகிறார்கள்.


ஆக மந்திர வார்த்தையை உருவாக்க வக்கில்லாத, துப்பில்லாத இவர்கள் ஏற்கனவே உருவாக்கிய மந்திர வார்த்தைகளை உடைப்பதற்கு மட்டும் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.